கோவை குறிச்சி அடுத்த சுந்தராபுரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் தொடங்கிய பேரணி, சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் சீருடை அணிந்து பங்கேற்று தொண்டர்களுடன் அணிவகுத்துச் சென்றார். சுந்தராபுரம் பிரதான சாலையைக் கடந்து சென்ற பேரணி, மச்சம்பாளையம் வாரச்சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் சீருடை அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேண்ட் வாத்தியத்துடன் டானிங்டன் பகுதியில் இருந்து புறப்பட்ட பேரணி, காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் பகுதியில் நிறைவடைந்தது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தொண்டர்கள் வீரநடை போட்டு அணிவகுத்துச் சென்றனர். இதில் உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை செல்லூரில் ஆர்.எஸ்எஸ் அணிவகுப்பை தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேச பக்தர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணா மடத்தின் நிர்வாக பொறுப்பாளர் ஸ்வாமி தயாசாகரானந்தர் மற்றும் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட மணி பாய் படேல் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
தேனியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள மேடை முன்பு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கூடினர். தொடர்ந்து, சீருடை அணிந்து கொடியை ஏற்றி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
















