வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கை, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களின் (MSME) கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த பருத்தி இறக்குமதிக்கான சுங்கவரி விலக்கு, தற்போது மேலும் 2 மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியை அதிகரிக்கவும், மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், ஜவுளி உற்பத்தியாளர்களின் உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும்.
இதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் போட்டித்தன்மை அதிகரிக்கும் எனத் தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
















