பாலியில் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விநியோகத் தடை காரணமாக, அங்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
இந்தோனேசியப் புள்ளியியல் துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் பாலிக்கு சுமார் 69.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 9.72 சதவீதம் அதிகமாகும்.
சுமார் 93 லட்சம் உள்நாட்டுப் பயணங்களுடன், மொத்தம் சுமார் 1.63 கோடி சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கணக்கிட்டுள்ள அரசு, பாலியின் சுற்றுலாப் பொருளாதாரம் சுமார் 10 பில்லியன் டாலர் என மதிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் சுற்றுலா முதலீடு 73.56 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளதாகச் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், மோசமான வானிலை, கடல் கொந்தளிப்பு மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாலியில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் உருவாகி, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாலி பயணத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வரும் நாட்களில் பாலிக்குச் செல்லும் பயணிகள், அங்குள்ள உள்ளூர் நிலவரங்களைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, பாலியின் முக்கிய சுற்றுலாத் தலங்களான டென்பசார் (Denpasar), பாடுங் (Badung), குடா (Kuta) மற்றும் உபத் (Ubud) ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. எனவே, விமான நிலையத்திற்குச் செல்லத் திட்டமிடும் பயணிகள் வழக்கமான நேரத்தை விடக் குறைந்தது 4 மணி நேரம் முன்னதாகவே புறப்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாலியின் அன்றாட வாழ்க்கையை, நெரிசலுக்கு இடையே ஊர்ந்து செல்லும் ஸ்கூட்டர்களின் வரிசையை விடச் சிறப்பாக வேறு எந்தக் காட்சியும் விவரித்துவிட முடியாது. அவை வழிபாட்டுத் தலங்களையும் நெல் வயல்களையும் கடந்து, குறுகிய சந்துகள் வழியாகக் கடற்கரையை நோக்கி மறைந்து செல்கின்றன. பல வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஸ்கூட்டர் வாடகைக்கு எடுப்பது என்பது அவர்களின் பயண அனுபவத்தின் முக்கிய அங்கமாகவே உள்ளது.
தற்போது நிலவும் பெட்ரோல் தட்டுப்பாட்டால், இந்த டாக்ஸி மற்றும் பைக் சேவைகளுக்கான கட்டணம் உயர வாய்ப்புள்ளது; அல்லது வாகனங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கும் இடங்களில் மின்சார வாகனங்கள் (EV) வாடகைக்குக் கிடைக்கின்றனவா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
இதனிடையே, பெர்டலைட் (Pertalite), டீசல் மற்றும் எல்.பி.ஜி (LPG) ஆகியவற்றுக்கான மானியங்களுக்கு இந்த ஆண்டு சுமார் 24 பில்லியன் டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அந்நாட்டின் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் பற்றாக்குறை உச்சவரம்பின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிதி வரம்பில் பாதிக்கும் மேற்பட்ட தொகையாகும்.
















