மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் மா.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்களைக் கொண்ட பகுதிகளாக மயிலாடுதுறை, திருக்கடையூர், தரங்கம்பாடி பகுதிகள் உள்ள நிலையில், இப்பகுதியில் ரயில்களை இயக்கும் வகையில் ரயில் பாதையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் மா.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மா.வெங்கடேசன், மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதையை சீரமைப்பது குறித்து ஒரு மாதத்தில் ஆய்வு செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
ரயில் பாதை சீரமைக்கப்பட்டு ரயில் இயக்கப்படும்போது ஆன்மிக சுற்றுலா ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியாகவும், அப்பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
















