நடந்து முடிந்த இஸ்ரேல் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு தனிக் கட்சிக்கும் அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகளில் முக்கிய கட்சிகள் இறங்கியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த ஹமாஸ் பயங்கர வாத தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் போர் என பல்வேறு போர்க் பதற்றங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் இது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றது.
மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளின் கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி 27 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களைப் பெற்றுள்ளது.
அடுத்த நிலையில் ‘ராம்’ (Raam) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகிய அரபு கட்சிகள் இணைந்து 19 இடங்களைக் கைப்பற்றி புதிய அரசை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய சக்திகளாக உருவெடுத்துள்ளன.
ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில் தேர்தல் முடிவுகள் இப்படி சிதறிப்போயுள்ளதால், புதிய அரசு அமைப்பதற்கான தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமானதாகவும், பல நாட்கள் நீடிக்கக்கூடியதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழமான அரசியல் மற்றும் கருத்தியல் பிளவுகள் காரணமாக, எளிமையான கூட்டணியை உருவாக்குவது கூட இஸ்ரேல் அரசியல் களத்தில் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே மாறியுள்ளது.
இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றிப்பெற்றுள்ள காடி ஐசென்கோட்டின் ‘யாஷர்’ கட்சி அவிக்தோர் லிபர்மேனின் ‘இஸ்ரேல் அவர் ஹோம்’ (Israel Our Home) மற்றும் நஃப்தாலி பென்னட்டின் ‘டுகெதர்’ (Together) போன்ற மத்திய மற்றும் வலதுசாரி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி 66 இடங்களை உறுதி செய்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருக்கிறது.
நெதன்யாகுவின் கூட்டணியின் பலம் ஆரம்பத்தில் இருந்த 64 இடங்களிலிருந்து 53 இடங்களாக இந்தத் தேர்தலில் குறைந்துள்ளது. ஆனாலும் இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக இருந்த நெதன்யாகு மிகவும் திறமையான அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். எதிர்க்கட்சிகளில் உள்ள சில உறுப்பினர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இதில் நெதன்யாகு தனது இயல்பான அரசியல் கூட்டணிகளான தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மதப்பற்றுள்ள யூதக் கட்சிகளைக் கைவிட வேண்டியிருக்கும். மேலும் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை எதிர்க்கட்சிகளும் கைவிட வேண்டியிருக்கும் . எனவே இது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
இரண்டாவது பெரிய கட்சியான ஐசென்கோட் தனது இயல்பான கூட்டணிகளுடன் இணைந்து அரசு அமைக்க முயற்சி செய்யலாம். இதில் ‘டெமாக்ராட்ஸ்’ (Democrats) மற்றும் ‘இஸ்ரேல் பெய் தேனு’ (Israel Our Home) போன்ற கட்சிகளும் இடம்பெறலாம்.
மேலும், இந்த அரசில் நேரடியாக உறுப்பினர்களாக இல்லாவிட்டாலும், ‘ராம்’ (Ra’am) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) என்ற இஸ்ரேலின் இரண்டு அரபு கட்சிகளும் ஐசென்கோட் ஆட்சிக்கு ஆதரவளிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னதாக இரு அரபு கட்சிகளும் ஐசன்கோட்டின் கட்சியுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளன. இதில் தனது அரசில் அரபு கட்சிகள் இடம்பெறாது என்ற தனது தேர்தல் வாக்குறுதியை ஐசன்கோட் கைவிட வேண்டியிருக்கும்.
ஒரு சுதந்திர அரபு கட்சி இஸ்ரேல் கூட்டணி அரசில் முதல் முறையாக அரசில் 2021-ல் பென்னட்டின் அரசில் ‘ராம்’ கட்சி இணைந்தது. ஆனால் அந்த அரசு 18 மாதங்களுக்குப் பிறகு கவிழ்ந்தது குறிப்பிடத் தக்கது.
இந்தச் சூழலில் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமான இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைகளைச் செய்து ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது. தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு கூட்டணி ஆட்சி ஏற்பட்டாலும் அந்த அரசு குறைந்தது 12 மாதங்கள் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே அடுத்த 12 வாரங்களுக்குள் இஸ்ரேலில் உள்ள முக்கிய கட்சித் தலைவர்களால் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், மீண்டும் ஒரு தேர்தலை இஸ்ரேல் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
















