பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கவும் தமிழகத்தில் 26 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்ததாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 46 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 26 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் மாநிலத்தின் 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு நீதிமன்றமும், சென்னையில் கூடுதலாக ஒரு நீதிமன்றமும் அமைக்கப்பட உள்ளன என்றும், இதன் மூலம் போக்சோ மற்றும் போதைப்பொருள் வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















