அக்னி வீரர்களின் சேவைக் காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், திறமையின் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளதாக முப்படை தலைமைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்பிரமணி அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கான சேவை காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல் 4 ஆண்டு கால சேவையை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில் 75 சதவீதத்தினருக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சேவைக் காலம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் முதல் தொகுதி வீரர்கள் தங்களது நான்கு ஆண்டு கால சேவையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவர்களின் செயல்திறன் குறித்த நேர்மறையான கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்னி வீரர்களின் மொத்த சேவைக் காலம் ஆறு ஆண்டுகளாக உயர்கிறது. முப்படைகளின் பரிந்துரையை ஏற்று மத்திய அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை தலைமைத் தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, அக்னி வீரர்களின் சேவைக் காலம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
















