நக்சல் பயங்கரவாதத்தை ஒழித்து, வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் வனப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை முகாமில், CRPF வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார்.
பின்னர் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது ராணுவ வீரர்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைக்கு நன்றி தெரிவிக்க, 140 கோடி மக்கள் சார்பாக இங்கு வந்துள்ளதாகக் கூறினார்.
ஒரு நாட்டின் உள்பாதுகாப்பு வலுவாக இருக்கும்போது, வெளிநாட்டு எதிரிகளால் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி,
கோடிக்கணக்கான நாட்டு மக்கள் நமது வீரர்கள் குறித்துப் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்து வரும் ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
நக்சல்களை எதிர்த்து நமது வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டதன் விளைவாக, பஸ்தர் வனப்பகுதி நக்சல் இல்லா பகுதியாக மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
நக்சல் குழுவினருக்கு எதிரான போர் எளிதானது அல்ல என்றும் கூறிய பிரதமர் மோடி, நக்சல் பயங்கரவாதத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
















