தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நாடு முழுவதும் தீப ஒளியால் அழகாக ஜொலிப்பதாகவும், தீமையை நன்மை வெல்வதையும், இருளை ஒளி வெல்வதையும் தீபாவளி பண்டிகை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளத்தை தீபாவளி திருநாள் கொண்டு வரட்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் மரபை இந்த ஆண்டும் தொடரப்போவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் தீபாவளித் திருநாள் மலரச் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளியைப்
பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தூய்மையான, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நமது தேசம் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இமாலய இலக்கை நோக்கி வீறுநடை போட்டு முன்னேறி வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன்,
தேசத்தின் அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் நயவஞ்சக சக்திகளின் சதித் திட்டங்கள் 140 கோடி மக்கள் சக்தியின் முன் சுட்டெரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தீபத் திருநாளில் ‘உள்ளூர் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுப்போம்’ என்ற பிரதமரின் சிந்தனையை ஏந்தி, நம் தமிழ் மண்ணின் பாரம்பரியப் பட்டாசு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஆதரித்து, அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சித் தீபங்களை ஏற்றுவோம் என்றும் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்றும், தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
















