தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடி ரூபாய் டிஜிட்டல் முறையில் மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களின் சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடி எப்படி அரங்கேறியது? மூன்று மாவட்டங்களின் பணம் எப்படி மாயமானது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள்தான் சைபர் குற்றவாளிகளின் இலக்காக மாறியுள்ளன. சென்னை நந்தனத்தில் உள்ள சிஐடி நகர் ஹெச்டிஎஃப்சி வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் வங்கிக் கணக்கில் இருந்து மட்டும் 14 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து 3 கோடியே 10 லட்சம் ரூபாயும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய் என மொத்தம் சுமார் 22 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பணம் தனிநபர்களுக்குச் சொந்தமானதல்ல. கிராமப்புற மக்களின் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மக்கள் நலத்திட்ட நிதி.
15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் சுகாதார நல மையங்கள் கட்டுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முக்கியமான திட்டத்திற்காக வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த பணம்தான் தற்போது மோசடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ஊராட்சிகளுக்குப் பணம் செலுத்துவதற்காக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தனியாக இணையதள போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளப் பக்கத்திற்குள் சைபர் குற்றவாளிகள் சட்டவிரோதமாக ஊடுருவி, பணத்தைப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி முதல் சிறுகச் சிறுக லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது ஒரே நேரத்தில் 22 கோடி ரூபாயையும் எடுத்துவிடாமல், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மேலும், வங்கிக் கணக்குகள் தொடர்பான மின்னஞ்சல்களை ஆய்வு செய்தபோது வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இணையவழி ஊடுருவலுக்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ராம்பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்ட பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்ற சம்பவம் புதுச்சேரியிலும் ஏற்கெனவே அரங்கேறியிருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து ஊழியர்களுக்கான ஊதிய நிதி உள்ளிட்ட மொத்தம் 8 கோடியே 85 லட்சம் ரூபாய் டிஜிட்டல் முறையில் திருடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அரசு நிதி குறிவைக்கப்பட்டிருப்பது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுடன், அந்த நிதியைப் பாதுகாப்பதும் அவசியம். இல்லையெனில் டிஜிட்டல் வளர்ச்சிக்கு இணையாக சைபர் குற்றங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
















