தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது எனவும், இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 19ஆம் தேதிக்கு பிறகு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் எனவும், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
















