இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு வருவதற்கான விசா முறையில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதில், இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13-ல் இருந்து 9ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும், துணை பிரிவுகள் 49-ல் இருந்து 23ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரிவுகளில் வணிகம், தூதரகம், வேலைவாய்ப்பு, செய்தியாளர், மருத்துவம், அதிகாரப்பூர்வம், மாணவர், பார்வையாளர் மற்றும் இதர விசாக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்படும் தகவல்கள் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்ப நடைமுறையை எளிமைப்படுத்தி, சுற்றுலாப் பயணிகள், மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை அதிகரிப்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய விசா நடைமுறை நடப்பாண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
















