திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், நாளை 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 300 கிலோ எடையும், ஐந்தே முக்கால் அடி உயரமும் கொண்ட பஞ்சலோக தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீபக் கொப்பரையை மலை உச்சிக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு 4 ஆயிரத்து 500 கிலோ நெய் நிரப்பி, ஆயிரத்து 500 மீட்டர் நீள காடா துணியால் திரி அமைக்கப்பட உள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் உருவம் வரையப்பட்ட கொப்பரையில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்நிலையில், சுமார் 40 லட்சம் பக்தர்கள் மகா தீபத்தை காண வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
















