சபரிமலை ஆன்லைன் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தேவசம் போர்டு வெளியிட்டுள்ள தகவலில், டிராவல் ஏஜென்சிகள் மொத்தமாக தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பக்தர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளதாகவும், விர்ச்சுவல் கியூ முன்பதிவுக்கு ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP-ஐ உறுதிப்படுத்திய பின்னரே முன்பதிவு செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த நாளில் தரிசனத்திற்கு வராமலும், டிக்கெட்டை ரத்து செய்யாமலும் இருப்பவர்களுக்கு நடப்பு மண்டல சீசனில் மீண்டும் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது என்றும், தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாதவர்கள் தரிசன தேதியை மாற்றிக்கொள்ளவும், முன்பதிவை ரத்து செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவம்பர் 30ஆம் தேதி வரை கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு விர்ச்சுவல் கியூ மூலம் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், போலி முன்பதிவுகள் மற்றும் டிக்கெட் விற்பனை முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்படும் புதிய கட்டுப்பாடுகள், நடப்பு சீசனிலேயே அமல்படுத்தப்பட உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
















