திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில்
உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரே ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாகவும்,
அரசு அதிகாரிகள், தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே மலை மீது சென்று தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் போது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்றும்,
தேவை ஏற்பட்டால் CISF பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டனர். பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்திற்கு செல்ல அனுமதி கிடையாது என்றும்,
கோஷங்களை எழுப்புவது, கும்பல் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரே ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாக தெளிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தொல்லியல் துறை மற்றும் மாநில நிர்வாகம் நிபந்தனைகளை முழுமையாக செயல்படுத்தி, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், தீபத் திருவிழா முடிந்த பிறகு மூன்று நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு இறுதி விசாரணைக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு மட்டும் தற்காலிக ஏற்பாடாக கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
அதேசமயம் ஏற்கனவே கல் தூணில் நிரந்தரமாக தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
















