செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மூன்றாவது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் லாரி தீ விபத்து தொடர்பான புகாரில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இரவு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிகாலை காவல் நிலையக் கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், 3வது நாளாக காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கணினி மற்றும் காட்சிப் பதிவுகள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி, சுமார் 10 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
















