பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள கட்டுமானத் தடையால் ரியல் எஸ்டேட் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கிரெடாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகும்படி கிரெடாய் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
















