இந்தியா – ஆசியான் உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் “ACT EAST” கொள்கை, இந்தியா – ஆசியான் உறவுக்கு புதிய உத்வேகத்தையும் ஆழத்தையும் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டாண்மை விரிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 2014-ஆம் ஆண்டு முதல் மக்களிடையேயான உறவை வலுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். 2014 முதல் 250 விரைவுத் தாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், திறன் மேம்பாட்டிற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உலகிற்கு தற்போது அமைதி, நிலைத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய சூழல் அவசியம் எனக் குறிப்பிட்ட பிரதமர், ஆசியான் 2045 மற்றும் வளர்ந்த இந்தியா 2047 இலக்குகளை இணைத்து, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
















