மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தின் கழிப்பறையில் லாரி ஓட்டுநர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான லாரி அண்மையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வாலாந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு பாலகிருஷ்ணன் சென்றிருந்தார்.
பின்னர் சிறிது நேரத்திலேயே பாலகிருஷ்ணன் கழிப்பறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தென் மண்டல காவல்துறை ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.
















