ஜெம் வீரமணி வழக்கு எதிரொலியாக பெண் காவல் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களில் சிக்கியுள்ள ஜெம் வீரமணி மீது 8 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் வீரமணி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகார் மீது முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, 14 வயது சிறுமி தொடர்பான வழக்கில் இரண்டு துணை ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா மற்றும் உதவி ஆணையர் ராஜலட்சுமி ஆகிய மூன்று பேரும் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மேலும் மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதனிடையே ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாகவும், விசாரணையை முறையாக நடத்தாமல் வழக்கை முடிக்க முயன்றதாகவும் காவல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், முன்னாள் உதவி ஆணையர் யாஸ்மின் உள்ளிட்ட 7 காவல்துறையினர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன.
















