திருப்பரங்குன்றம் கோயிலில் 150 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபை மாற்றி, புதிய இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம், தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், 1923ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வாதங்களை முன்வைத்தனர்.
மலைப் படிக்கட்டுப் பகுதி மற்றும் நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் தர்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்தத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கடந்த 150 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும்,
தீபத்தூண் எனக் குறிப்பிடப்படும் இடத்தில் இதுவரை தீபம் ஏற்றப்பட்டதில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் இந்து மதம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல என்றும்,
இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு உரிமையும், உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவால் சமூகத்தில் பதற்றம் ஏற்படக்கூடாது என்றும்
தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்து வாதிட்ட மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், கோயிலில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்றுவது சாதாரணமான நடைமுறைதான் என்றும்,
இதற்குச் சிறப்பு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தனர்/ இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
















