தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான நிஷாந்தை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர், கொள்ளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் காதலியும் இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே முக்கிய குற்றவாளியான நிஷாந்த், செல்போன் நெட்வொர்க் மூலம் தொடர்ந்து இடம் மாறி தப்பித்து வருவதாக, 4-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரை மட்டுமின்றி சேலம், கோவை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் கேரளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள தனிப்படையினர், நிஷாந்தை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















