சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, இந்தியா முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியின் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்……….
நமக்குத் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது… எதிர்முனையில் பேசுபவர் வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்… நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பதற்றப்படுத்துகிறார்… நம்பி ஒரு தகவலைச் சொன்னால் போதும்… நம்முடைய சேமிப்புப் பணமே காணாமல் போய்விடுகிறது!
இப்படிப்பட்ட சைபர் மோசடிகளுக்குப் பின்னால், சென்னையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சிம் பாக்ஸ் கட்டமைப்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளை இந்திய உள்ளூர் அழைப்புகளாக மாற்றிக் காட்டும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மோசடி கும்பல்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பொதுமக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 கருவிகள் செயல்பாட்டிலும், ஒரு கருவி செயல்படாத நிலையிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 11 சிம் பாக்ஸ் கருவிகள், 182 சிம் கார்டுகள், கணினிகள், சர்வர்கள் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் நிறுவன மேலாளர் சீனிவாசன், தொழில்நுட்ப வல்லுநர் சஞ்சய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் எனக் கூறப்படும் சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆனால், இந்த வழக்கில் அதிர்ச்சிக்குக் காரணம் பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மட்டுமல்ல… இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் புகார்களின் எண்ணிக்கையும் தான்!
இந்தக் கும்பலுடன் தொடர்புடையதாக இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. இதில் 52 புகார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. மற்றவை வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளன.
மேலும் ஓர் அதிர்ச்சியாக, பண மோசடிப் புகார்களோடு சிலரின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் குறித்த புகார்களும் விசாரணையில் இடம்பெற்றுள்ளன.
ஒருபுறம் சைபர் மோசடிகள்… மறுபுறம் மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோகும் வேதனை!
தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டு மட்டும் சைபர் குற்றங்களால் ஏற்பட்ட பண இழப்பு 2,176 கோடி ரூபாய். 2026-ஆம் ஆண்டிலும் இதுவரை 1,474 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்வது மனித வாழ்க்கையை எளிதாக்கத்தான்… ஆனால் அதே தொழில்நுட்பம் மனிதர்களின் நம்பிக்கையையும் உழைப்பையும் பறிக்கும் ஆயுதமாக மாறிவிடக் கூடாது என்பதே சைபர் கிரைம் போலீசாரின் எச்சரிக்கையாக உள்ளது…
















