காவல் பணியில் இருந்தபோது தம்மால் கைது செய்யப்பட்ட நபர், தற்போது வீட்டிற்கே வந்து மிரட்டுவதாக ஆறுமுகநேரி முன்னாள் காவல் ஆய்வாளர் திலீபன் வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன், கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றினார். பெண் காவலர் அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறி அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் தனது வீட்டிற்கு வந்து அவதூறாகப் பேசியதாக திலீபன் தெரிவித்துள்ளார். மேலும், காவல் பணியில் இருந்தபோது தம்மால் தண்டிக்கப்பட்ட நபர்களால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















