தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து, பல தலைமுறை நடிகர்களுடனும் நடித்தவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. 94-வது வயதில் மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. திரையுலகில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
1931 டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தெக்குமல்லா வெங்கோஜி ராவ் – சச்சி தேவி ஆகியோருக்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் சங்கரமஞ்சி ஜானகி என்ற சௌகார் ஜானகி. இவரது தங்கை கிருஷ்ண குமாரி ஒரு புகழ்பெற்ற நடிகையும் கூட. ஆரம்பக் கல்வியை அசாமில் உள்ள கௌஹாட்டி பல்கலைக் கழகத்தில் முடித்து , அரிசோனா பல்கலைக் கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
காகித ஆலை நடத்தி வந்த சௌகார் ஜானகியின் தந்தை தொழில் காரணமாக குடும்பத்துடன் பல்வேறு இடங்களில் இடம்பெயர வேண்டிய சூழல் இருந்தது. சென்னையில் இருந்த காலத்தில் சாரதா வித்யாலயாவில் படித்த ஜானகி, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
வானொலியில் அவருக்கு இருந்த ஆர்வம், சென்னை அகில இந்திய வானொலியில் நாடகக் கலைஞராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றும் நிலைக்கு உயர்த்தியது. சங்கரமஞ்சி ஜானகியின் வானொலி நாடகத்தைக் கேட்ட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, தனது திரைப்படத்தில் நடிக்குமாறு அவரை அணுகினார். இதற்கு சம்மதிக்காத குடும்பத்தினர், விஜயவாடாவில் உள்ள உறவினர் ஒருவருக்கு சங்கரமஞ்சி ஜானகியை மணம் முடித்து வைத்தனர்.
திருமண வாழ்க்கை அவரை சினிமாவில் இருந்து முழுமையாகத் தள்ளி வைக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமடைந்ததால், மீண்டும் சினிமாவை அவர் அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது. கையில் குழந்தையுடன் வாய்ப்பு தேடிய சங்கரமஞ்சி ஜானகிக்கு ‘ஷாவுக்காரு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
1950ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘ஷாவுக்காரு’ மூலம் சங்கரமஞ்சி ஜானகி கதாநாயகியாக அறிமுகமானார். என்.டி.ராமாராவ் நடித்த அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. பின்னாளில் படத்தின் பெயரான ‘ஷாவுக்காரு’, திரைப்பட உலகில் ‘சௌகார் ஜானகி’யாக மாற்றியது.
தமிழில் ‘வளையாபதி’ திரைப்படம் சௌகார் ஜானகிக்கு ஆரம்பக் காலத்தில் முக்கியப் படமாக அமைந்தது. அந்த படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘இரு கோடுகள்’ எனத் தொடர்ச்சியாக பல முக்கியமான படங்களில் நடித்தார்.
காதல், பாசம், கோபம், கம்பீரம், நகைச்சுவை எனப் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் நடிகையாக மாறினார். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் உயர்ந்த சமூக அந்தஸ்துடைய பெண்மணியாகவும், ‘இரு கோடுகள்’ படத்தில் மாவட்ட ஆட்சியராகவும், ‘ஒளி விளக்கு’ படத்தில் விதவைப் பெண்ணாகவும், ‘படிக்காத மேதை’ படத்தில் சிவாஜியின் அப்பாவி மனைவியாகவும் நடித்தார்.
அதே நடிகை, ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ போன்ற படங்களில் நகைச்சுவையையும் எளிதாகக் கையாண்டார். ரஜினிகாந்த் நடித்த ‘தில்லு முல்லு’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை நடிப்பு, புதிய தலைமுறை ரசிகர்களிடமும் அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.
சௌகார் ஜானகியின் திரைப்பயணம் தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை இணைத்துள்ளது. தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் ஆகியோருடன் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நட்சத்திரங்களுடனும் திரைப் பயணத்தை பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் பிரேம் நசீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 390க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்
இயக்குநர் கே.பாலசந்தரின் படைப்புலகிலும் சௌகார் ஜானகிக்கு முக்கிய இடம் இருந்தது. பாலசந்தரின் முதல் திரைப்படமான ‘நீர்க்குமிழி’யில் அவர் நடித்தார். தொடர்ந்து ‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களிலும் இடம்பெற்றார். நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் முயன்றார். கே.பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த ‘காவியத் தலைவி’ திரைப்படத்தைத் தயாரித்து, அதில் இரட்டை வேடங்களிலும் நடித்தார். அவர் தயாரித்தவற்றில், ‘ரங்கராட்டினம்’ என்ற திரைப்படமும் ஒன்று.
திரைப்படங்களுடன் அவரது கலைப் பயணம் முடிந்துவிடவில்லை. கே.பாலசந்தரின் நாடகங்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். மிகவும் பிஸியான திரைப்பட நடிகையாக இருந்தபோதும் 1960களில் தொடங்கிய அவரது நாடகப் பயணமும் ஒருபுறம் சீராக நீண்ட காலம் தொடர்ந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கிய, கார்த்தி – ஜோதிகா நடித்த ‘தம்பி’ திரைப்படத்தில் பாட்டி பத்மா கதாபாத்திரத்தில் நடித்தார். 2020இல் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ திரைப்படத்திலும் நகைச்சுவை கலந்த முக்கியப் பாத்திரத்தில் தோன்றினார்.
கலைமாமணி, எம்.ஜி.ஆர். விருது, தெலுங்கு திரைப்படங்களுக்கான நந்தி விருதுகள், ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல கௌரவங்களையும் பெற்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. குடும்ப வறுமையில் இருந்து மீள்வதற்காக கைக்குழந்தையுடன் வாய்ப்பு தேடி வந்த இளம்பெண், பிற்காலத்தில் தென்னிந்திய சினிமாவின் பல தலைமுறைகளை நேரில் கண்ட நடிகையாக மாறினார். கருப்பு-வெள்ளை சினிமாவின் கதாநாயகியாகத் தொடங்கிய அவரது பயணம், ரஜினி, கமல் தலைமுறையைக் கடந்து புதிய நூற்றாண்டின் திரைப்படங்களிலும் தொடர்ந்தது.
அதனால்தான் சௌகார் ஜானகியின் மறைவு ஒரு மூத்த நடிகையின் மறைவாக மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவின் 70 ஆண்டு கால வரலாற்றைத் தனது நடிப்பின் வழியாகச் சுமந்து சென்ற ஒரு தலைமுறையின் விடை பெறுதலாகவும் நிற்கிறது.
















