திமுக மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு 70ஆக நிர்ணயித்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், 13 மூத்த நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 77இல் இருந்து 110ஆக அதிகரிக்கப்படுவதாகவும், மாவட்ட செயலாளர்களின் வயது வரம்பு நிர்ணயம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில் 70 வயது கடந்தவர்களை பதவியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ள திமுக மேலிடம், உறுப்பினர் சேர்க்கைக்குப்பின் உட்கட்சி தேர்தல் மூலம் நிர்வாகிகளை நியமிக்கலாம் என அறிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தின்படி திமுக முன்னாள் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், முத்துசாமி, ஆர்.காந்தி, எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் பதவிகளை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி
மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகி எஸ்.ஆர்.சிவலிங்கம், தஞ்சை வடக்கு சாக்கோட்டை அன்பழகன், பதவியை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் திமுகவின் மதுரை மாவட்ட நிர்வாகி தளபதி, தேனி தெற்கு மாவட்ட நிர்வாகி ராமகிருஷ்ணன், நெல்லை மேற்கு ஆவுடையப்பன் ஆகியோரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















