சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியிடமும் அமலாக்க துறை
அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணையைத் தொடங்கினர்.
நேற்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு வரை அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து முக்கியஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அதன் அடிப்படையில் சம்மன் வழங்கப்பட்டு, அமைச்சர் பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நேற்று இரவு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. விசாரணை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடியை மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள் .
இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆஜராகினர்.
அங்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.