தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில்,
கிருஷ்ணகிரியில் (தமிழ்நாடு) பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மதிப்புமிக்க உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது பிரார்த்தனைகளும் எண்ணங்களும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று அதில் கூறியுள்ளார்