கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை தீ விபத்துக்குச் சிலிண்டர் வெடித்ததுதான் காரணம் என்று தமிழக அரசு கூறியிருக்கும் நிலையில், அந்த வீட்டில் எரிவாயு இணைப்பே இல்லை. ஆகவே, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் இருந்த பட்டாசு ஆலையில் கடந்த 9ஆம் தேதி பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், பதினைந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தீ விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, இது தொடர்பாக நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது, கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தமிழக அரசும், அமைச்சரும் தெரிவிப்பதாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு கேஸ் சிலிண்டர் காரணம் அல்ல. அந்த முகவரியில் கேஸ் இணைப்பு எதுவும் இல்லை. நாடு முழுவதும் 36 கோடி அளவிற்கு கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. கேஸ் சிலிண்டர் வெடித்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆகவே, அங்கு வேறு ஏதோ வெடி பொருட்கள் இருந்துள்ளது. தமிழக அமைச்சர் குடியிருப்பு பகுதியில் எப்படி பட்டாசுகள், வெடி மருந்துகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.