பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் நிலையில், இந்தியா மீது போரை நடத்த விரும்பவில்லை. அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்.
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார். பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான அரசாங்க உறவுகள் விரிசல் அடைந்து விட்டன. இச்சூழலில் இந்தியாவுடன் போர் நடத்துவது தேவையற்றது.
பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல. கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், திட்டவட்டமாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை முழுவதுமாக கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.