‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’யை முன்னிட்டு தென்காசியில் இருந்து வாராணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் பண்பாட்டு பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் ஆகியவற்றை மக்கள் எளிதாக சுற்றிப்பார்க்க, இந்திய இரயில்வே மத்திய அரசின் கீழ் ‘பாரத் கௌரவ் இரயில்கள்’ திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையங்களில் இருந்து காசி, வாரணாசி, கயா, ஷீரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில் தென்காசி – வாரணாசி இடையே பாரத் கௌரவ் இரயில் சேவை வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இரயிலானது தென்காசியில் இருந்து நவம்பர் 9 ஆம் தேதி மதியம் 3.50 மணிக்கு புறப்படும் எனவும் அந்த இரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னைதொடர்ந்து மறுநாள் விஜயவாடா, வாரங்கல், பல்கர்ஷா சென்றடைந்து, 11 ஆம் தேதி பிரயாக்ராஜ் சங்கம் வழியாக இரவு 10.30 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது.
அதற்கு பின்னர் நவம்பர் 13 ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா, சம்பல்பூர், விஜயவாடா, சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், ராமேஸ்வரம் வழியாக, 17 ஆம் தேதி இரவு 7:25 மணிக்கு தென்காசி திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா இரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 3ம் , படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8ம் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.