கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தற்போது 12வது நபராக முகமது இத்ரீஸ் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று அதிகாலையில் மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில் உக்கடம் ஜி.எம் நகரை சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கார் வெடித்ததில், இரண்டாக கார் உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ISIS தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை தமிழக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டது.
மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை நடத்தி வந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேர் உட்பட இதுவரை 11 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவரை நேற்று இரவு என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுவரை கோவை கார் குண்டுவெடிப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆவது நபராக முகமது இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.