பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் “என் மண் என் மக்கள்” பத்தாம் நாள் யாத்திரையை நேற்று மேற்கொண்டார். அவருக்கு திருமங்கலம் பகுதி பொதுமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அப்போது கூட்டத்தில் பேசியதாவது, அரசியலைப் பொறுத்த வரை திருமங்கலத்துக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அது உங்களுக்கும் எனக்கும் பொதுவானது. அது என்னவென்றால், திருமங்கலம் மாடலும் , அரவக்குறிச்சி மாடலும் .
தமிழக தேர்தல் வரலாற்றில் திருமங்கலமும் அரவக்குறிச்சியும் ஒரு கரும்புள்ளியாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. 350 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2009 ஆம் ஆண்டு திருமங்கலம் ஃபார்முலா இங்கே ஆரம்பிக்கப்பட்டு, இன்றைக்கு இந்தியா முழுவதுமே திருமங்கலம் ஃபார்முலா சென்றிருக்கிறது.
இதை மாற்ற வேண்டுமென்றால் திருமங்கலத்திலிருந்து மாற்றம் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி, திராவிட மாடலில் திமுகவின் 27 மாத ஊழல் ஆட்சி. இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமே இரண்டு ஆட்சிகளை வேறுபடுத்திக் காட்டுவது. அரசியலில் என்னவெல்லாம் தவறு இருக்கிறதோ? அனைத்தும் இன்றைக்கு தமிழகத்தில் தான் இருக்கிறது. ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, இங்கே மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வருவதாக சொல்லி உங்களிடம் வாக்குகள் வாங்கிய , முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தைக் கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி உள்ளார்.
இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்குவதில் மூன்றாவது இடமாக இருந்த தமிழகம் தற்போது முதல் இடத்திற்கு வந்துள்ளது. அதாவது ஏழு லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு குடும்பத்தின் தலையின் மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. இதையெல்லாம் தாண்டி தமிழகம் எப்படி முன்னேறும்?, மக்களுக்கு தேவையான கட்டிடங்களை எப்படி கட்டிக் கொடுக்கும், இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு எப்படி வழங்க முடியும்? பெண்களுக்குத் தேவையான வசதிகளை எப்படி தமிழகம் செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கு நல்லது எதையும் செய்ய முடியாத ஒரு காலகட்டத்தில் இந்த ஆட்சி மாட்டிக்கொண்டிருக்கிறது. கடன் வாங்கித்தான் இந்த ஆட்சியை நடத்த முடியும் என்ற அவலமான சூழ்நிலைக்கு இந்த ஆட்சி தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளால், தமிழகம் நம்பர் ஒன் குடிகார மாநிலமாக திகழ்கிறது. 18 வயதிலிருந்து அறுபது வயதுக்குள் 18 சதவீதமாக ஆண்கள் குடிக்கு அடிமையாகி உள்ளனர்.
18 சதவீத ஆண்களால் இந்த சமுதாயத்திற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் மட்டுமே மதுவிற்கு அடிமை ஆகும் நிலைமை அதிகரித்துள்ளது. இதனால் 18 சதவீதம் ஆண்களின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு அதிக பிரச்சனைகள் உள்ளது. மதுவில்லாமல் இந்த அரசை நடத்த முடியாது என்று இவர்கள் சொல்கிறார்கள். டாஸ்மாக் வரியின் மூலம் அரசிற்கு வரக்கூடிய வருமானம் 44 ஆயிரம் கோடி ரூபாய். இன்றைக்கு பாஜக வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளோம், அந்த வெள்ளை அறிக்கையில், பனை மரம், தென்னை மரங்களின் மூலம் வரக்கூடிய எல்லா பொருட்களையும் மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக தென்னங்கள் , பனங்கள், பதநீர் முதலியவற்றை அனுமதிக்கவேண்டும். அதன் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி மாநில அரசு சம்பாதிக்க முடியும் என்று வெள்ளை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக்கில் வெறும் 44 ஆயிரம் கோடி மட்டுமே வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை நிறுத்திவிட்டால் மாநில அரசுக்கு வருமானம் வராது என்கிறார்கள் அது உண்மையில்லை, டாஸ்மாக்கை நிறுத்தினால் திமுகவிற்கு வருமானம் வராது என்ற காரணத்திற்காகத் தான் டாஸ்மாக் கடைகளை மூடமறுக்கிறது திமுக.
டாஸ்மாக் கடைகளில் ஒரு மாதத்திற்கு 52 லட்சம் பெட்டிகள் விற்பனை ஆகிறது. இதில் 40 லட்சம் பெட்டிகள் திமுகவை சார்ந்தவர்கள் நடத்துகின்ற மது ஆலையிலிருந்து வருகிறது. 40% மதுக்கள் திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் நடத்தக்கூடிய மது ஆலையிலிருந்து வருகிறது. டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகன், டிஆர்பி ராஜா ஆகியோர் சாராய ஆலையை நடத்துகிறார்கள். இதன் காரணமாகத்தான் திமுக அரசு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடி கள்ளுக் கடைகளைத் திறந்து வைத்தால், யாருக்கும் எதுவும் நடக்காது, யாரெல்லாம் குடிக்கிறார்களோ அவர்களது குடல்கள் வேகாது, 40, 50 வயதில் அவர்கள் இறக்க மாட்டார்கள், தற்போது பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் இருக்காது. தமிழகத்தில் 1967 வரைக்கும் மது கடைகள் மூடியே இருந்தது. மதுவினால் வரக்கூடிய வருமானம் புழுத்துபோன தொழில் நோயாளிகளின் கையில் இருக்கும் வெண்ணெயைப் போன்றது, அப்படிப்பட்ட பணம் அரசுக்கு தேவை இல்லை என அண்ணா தெரிவித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, மது கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னவர். ஆனால் இன்று அதே திமுகவில் இருக்கக்கூடிய மறைந்த கருணாநிதி மதுக்கடைகளைத் திறக்க கையெழுத்து போட்டு மது கடைகளில் திறந்து வைத்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மதுக்கடைகளை இன்னும் அதிகமாக்கி 5500 மேல் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நிறுத்த வேண்டும் என்றும் மதுக் கடைகளை குறைக்க வேண்டும் என்றும் இந்த யாத்திரையில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டனர். 32 சதவீத பெண்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி பொருந்தும் எனவும், 68% பெண்களுக்கு நகை கடன்கள் பொருந்தாது எனவும் திமுக சொல்கிறார்கள்.
திமுக அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தர உள்ளதாக சொல்லி இருக்கிறது, ஆனால் பெண்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். அப்படிக் கிடைத்தாலும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிருக்கு கொடுக்கப்பட உள்ளது. மேலும் இதற்காக ஒதுக்கி இருக்கும் ஏழாயிரம் கோடி ரூபாயில் 2500 கோடி ரூபாய் மத்திய அரசின் பணத்தை மடை மாற்றி அனுப்பி இருக்கிறார்கள்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லை. அதனால்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும் மருமகனும் கடந்த 27 மாதங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார்கள் என அமைச்சர் பிடிஆர் சொன்னார். இதுகுறித்து பாஜக ஒரு ஒலிநாடாவை (ஆடியோ) வெளியிட்டது.
திமுகவின் முகவரி என்பது கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் தான். திமுகவின் தேர்தல் அறிக்கையில் 3,50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் இரண்டு ஆண்டுகள் நிறைவில் 2000 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக தொழிற்சாலைகளில் நிறுவ வேண்டும் என்றால் திமுக குடும்பத்திற்கு 30 சதவீதம் கப்பம் கட்ட வேண்டும். அதனால் தான் தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள், கர்நாடகா, குஜராத் தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று விட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு தொழிற்சாலையும் உருப்படியாக வரவில்லை.
துபாய்க்குச் சென்ற முதலமைச்சர் 6000 கோடி முதலீடு என்று தெரிவித்து இருந்தார். கடந்த ஒன்றரை வருடமாகியும் ஆறு ரூபாய்க்கு கூட வரவில்லை. முதல்வர் ஸ்டாலின்
ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற போதிலும் ஒன்றையும் செய்யவில்லை. தற்போது இளைஞர்கள் தமிழகத்தில் நடு ஆற்றில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கிறார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று தெரிவித்தார். கடந்த ஒரு வருடத்தில் 5,40,000 இளைஞர்களுக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வரக்கூடிய டிசம்பர் 31 தேதிக்குள் 4 லட்சத்து 60 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்து, பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசிலே
ஒன்றரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
ஊழல் ஆட்சி, கடன்கார ஆட்சி, குடிகார ஆட்சி இது மூன்றும் சேர்ந்து தமிழகத்தை பின் நோக்கி இழுத்துக் கொண்டு போகிறது. தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இங்கு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 லட்சம் குடும்பங்களுக்குக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு முத்ரா திட்டம் மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சாலையோர கடை நடத்தும் வியாபாரிகளுக்கு சுப நிதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் சுப நிதி திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி ஏழை பங்காளனாக, ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் சம்பாதித்தை தவிர 27 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு ஒரு நல்லதும் நடக்கவில்லை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும், தமிழக மற்றும் புதுவையில் இருந்து 40 நாடாளுமன்ற செல்ல வேண்டும், பிரதமர் மோடியின் அமைச்சரவையை அலங்காரப்படுத்த வேண்டும். இதிலிருந்து தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்கள் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவினர் அதிக பொய்களை சொல்லி வருவார்கள், திமுகவின் தமிழ் அகராதி,
அ என்று சொன்னால் அக்கிரமம்,
ஆ என்று சொன்னால் ஆக்கிரமிப்பு,
இ என்று சொன்னால் இருட்டு
உ என்று சொன்னால் உருட்டு,
ஊ என்று சொன்னால் ஊழல்,
எ என்று சொன்னால் எகத்தாலம்,
ஏ என்று சொன்னால் ஏமாற்றுவது,
அனைத்தையும் செய்து, நாடாளுமன்றத்தில் வெற்றி பெற முயற்சி எடுப்பார்கள். கடந்த 2019 தேர்தலில் அதே வேலையை தான் செய்தார்கள். இந்த முறை நாம் தெளிவாக இருக்கிறோம், பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி, தமிழகம், புதுவையில் இருந்து 40க்கு 40 நாடளு மன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.