நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தில் மீதான விவாதம் ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் நடந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்து பேசினர். அப்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இடையூறை ஏற்படுத்தினார்.
நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதற்திற்கு பதிலளித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதும், பிரதமரைப் பேசவிடாமல் இடை இடையே இடையூறை ஏற்படுத்தினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இதையடுத்து, அவரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசும் போது, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அடிக்கடி இடையூறு செய்தார். பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. இவ்வாறு இடையூறு செய்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. மேலும், தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆகவே, அவரது தவறான நடத்தையின் காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை ஆதிர் இரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆகவே, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.