ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர், கடந்த மாதம் “இந்தியா” என்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்தியா என்கிற பெயரைத் தவிர்த்து “பாரதம்” என்று பா.ஜ.க.வினர் அழைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில், “இந்திய” எனத் தொடங்கும் சட்டங்களையும் “பாரதிய” என்று மாற்ற மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இம்மசோதா இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், எவிடென்ஸ் சட்டம் ஆகியவற்றை பெயர் மாற்றம் செய்ய வழிவகைச் செய்கிறது. அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் பாரதிய நியாய சன்ஹீத, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயர் பாரதிய நாகரிக் சுரக் ஷ சன்ஹீத, இந்திய ஆதாரச் சட்டத்தின் பெயர் பாரதிய சக் ஷயா என மாற்றம் செய்யப்பட இம்மசோதா பரிந்துரைக்கிறது.
அதே சமயம், இம்மசோதா மேற்கண்ட சட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றம் செய்வதற்காக கொண்டு வரப்படவில்லை. இச்சட்டங்களின் அடிப்படைக் கூறுகள் மற்றும் அடிப்படை அமைப்புகளும் மாற்றி அமைக்கப்பட உள்ளன. ஒரு நபரை கைதுச் செய்வது முதல் அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களைக் கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது என பல விஷயங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதும் மாற்றி அமைக்கப்படவிருக்கிறது.
மேற்கண்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1860 முதல் 2023-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின் படியே குற்றவியல் நீதி அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆகவே, ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மேற்கண்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்ப பட்டு உள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் ஒப்புதலைப் பெற்று 3 சட்டங்களும் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் வரும். காரணம், புதிய தண்டனைச் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது 90 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்பது தான் எங்களது இலக்கு. அதேபோல, பாரதிய நியாய சங்ஹீத சட்டத்தின் மூலம் தேச துரோக வழக்கை இரத்து செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.