இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்திருப்தாக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் சோலான் பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரை காணவில்லை. அதேபோல், கனமழை காரணமாக, சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சம்மன் ஹில் பகுதியில் இருந்த சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இதில், பலரும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிலச்சரிவால் இமாச்சல் பிரதேசத்தில் 751 சாலைகள் முடங்கிப் போய் இருக்கின்றன. இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “நிலச்சரிவில் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும். ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கோ, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம். மழை நின்ற பிறகு, மீட்புப் பணிகள் நடைபெறும்” என்றார்.
கனமழை காரணமாக, மாண்டி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.