உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு வருகிற 25-ம் தேதி இணையதளத்தில் விற்பனை தொடங்குகிறது. அன்றைய நாளே, இந்திய அணி அல்லாத மற்ற அணிகளின் ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்தியா முழுக்க நவராத்திரி விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட தயாராகி வரும் இந்த சூழ்நிலையில், நவராத்திரி தொடங்கும் அக்டோபர் 15ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணி மோதும் என அறிவிக்கப்பட்டது. அதனால், விளையாட்டு நிகழ்ச்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியாது என காவல் துறை தரப்பில் தேதி மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து, திருத்தப்பட்ட புதிய அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. ஆனால் போட்டி நடக்கும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அதே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், போட்டிக்கான நுழைவு சீட்டுக்கு விற்பனைக்கான தேதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் காண இணையத்தில் நுழைவு சீட்டு விற்பனை வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது
மேலும், நுழைவுச் சீட்டு கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்க https://www.cricketworldcup.com/register என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்வதன் மூலமாக விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.