குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், இருவருமே ஆஜராகாத நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை கடந்த 7-ம் தேதி இரவு காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 12-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியை 25-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், கரூர் இராம் நகரில் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது தொடர்பாக, அவரது மனைவி நிர்மலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சம்மனை ஒட்டி விட்டுச் சென்றனர்.
இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார். ஆகவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இந்த சூழலில், கேரள மாநிலம் கொச்சியில் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார். அவரிடம் சட்ட விரோத பணப் பரிமாற்றம், 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது உள்ளிட்டவை தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அம்மனுவில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை, கைது, மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்குமாறு கோரப்பட்டிருக்கிறது. இம்மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மேற்கண்ட ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது.