திண்டுக்கல்லில் குடும்பப் பிரச்சனைக் காரணமாகப் பெண் வியாபாரி மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் காந்தி மார்க்கெட் அருகே எலுமிச்சை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நாகலட்சுமி வழக்கம் போல் எலுமிச்சை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாலமுருகன், அவருடைய நண்பர்கள் மணிகண்டன், சூர்யா ஆகியோர் நாகலட்சுமியிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் குண்டு பாட்டிலை நாகலட்சுமியை நோக்கி வீசிவிட்டு தப்பியோடினர். குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த நாகலட்சுமி சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் சூர்யா என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 2 பேரைத் தேடி வந்த நிலையில். குடைப்பாறைப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.