இந்திய மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது உலகக் கோப்பை தொடர் நெருங்க நெருங்க, உலகக் கோப்பை குறித்தான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் சென்று கொண்டே இருக்கிறது.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியை எவ்வாறு அமைப்பது? எந்த வீரர்களை எந்த வரிசையில் களம் இறக்குவது? என்பது தொடர்பாக நிறைய ஆலோசனைகள் முன்னாள் வீரர்களிடம் இருந்து வந்துவண்ணம் இருக்கின்றன. இதில்,விராட் கோலியை நான்காவதாக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி சொன்னார்.
அதே சமயத்தில் “விராட் கோலி நான்காம் இடத்தில் விளையாட கூடாது, அது மிகவும் ஒரு தவறான முடிவாக அமைந்துவிடும். அவர் எந்த அளவுக்கு பேட் செய்ய தாமதமாக வருகிறாரோ அந்த அளவுக்கு எதிர் அணிக்கு நல்லது” என்று ரவி சாஸ்திரியின் கருத்துக்குச் சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகில் விராட் கோலிக்கு மிகவும் நெருங்கிய நண்பருமான ஏபிடி வில்லியர்ஸ் இதுபற்றி தனது கருத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய டி வில்லியர்ஸ், “விராட் கோலி நான்காம் இடத்தில் களம் இறங்குவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஏனென்றால் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான வீரர் அவர் மட்டுமே. அப்படி களம் கண்டால் மட்டுமே அவரால் ஆட்டத்தை அங்கிருந்து கடைசி வரை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். ஆனால் அவர் இந்த இடத்தை எடுத்துக் கொள்வாரா? என்று எனக்குத் தெரியாது. ஆனால்,அவர் நான்காவதாகத் தான் களம் காண வேண்டும் என்று விரும்புகிறேன்.
நம் அணிக்கு ஏதாவது தேவை என்று வரும்போது, கையை உயர்த்தி அந்த வேலையை நாம் செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை.
ஆசியக் கோப்பை தொடரைப் பொறுத்தவரை அதை வெல்வதற்கான போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் முன்னணியில் இருக்கிறது. மேலும்,பெரிய அணிகளை வீழ்த்தக்கூடிய திறமைகள் உள்ள இலங்கை அணியும் கடுமையான சவாலை முன்நிறுத்தும்”என்று டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.