இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான டிஜிட்டல் இணைப்பில் மற்றோரு மைல்கல்லை குறிக்கும் வகையில் வர்த்தக அறக்கட்டளை தளத்தை பயன்படுத்தி இந்தியாவும் சிங்கப்பூரும் முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் உயர் ஆணையர், சைமன் வோங் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில், “இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, வர்த்தக அறக்கட்டளை தளத்தைப் பயன்படுத்தி முதல் நேரடி காகிதமில்லா பரிவர்த்தனையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே டிஜிட்டல் இணைப்பில், மற்றோரு மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக டிஜிட்டல் இணைப்பு, ஃபின்டெக், பசுமைப் பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் நடைபெற்ற பரந்த அளவிலான விவாதங்கள் குறித்து பிரதமரிடம் தூதுக்குழுவினர் விளக்கினார்கள். இது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையின் முதல் சந்திப்பு ஆகும், இது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய அமைச்சர்களின் மேடையாகும். ISMR தற்போதுள்ள ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் இருதரப்புக்கும் பயன் தரும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பதையும் அடையாளம் காண முடிகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கைச் சந்தித்து, இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை செயல்முறையை முன்னெடுப்பது பற்றி பேசினார்.சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த ஆன்லைன் கட்டண முறைகளையும் இணைத்துள்ளன.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் வீ குயென், “இந்த ஒத்துழைப்பு இருதரப்பு உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து இருக்க தனது நாடு எதிர்நோக்குவதாகவும்” கூறினார்.