69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான வெற்றியாளர்களைக் கடந்த 24-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இதில், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில், கருவறை ஆவணப்படத்திற்கு, இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் பாபு இயக்கியிருந்தார்.
தேசிய விருது பெறும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழைப் பொழிந்தனர்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இசைஞானி இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு, நேரில் சென்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இளையராஜாவுக்கு, பூங்கொத்து கொடுத்தும், அவரது காலில் விழுந்தும் ஆசி பெற்றார்.
ஸ்ரீகாந்த் தேவா, மென்மேலும் வளர வேண்டும் என்றும், பல்வேறு விருதுகள் பெற வேண்டும் என்றும் இசைஞானி இளையராஜா வாழ்த்தினார்.
ஏற்கனவே, சிறந்த இசையமைப்பாளர் விருது தெலுங்குத் திரைப்படமான புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத்துக்குக் கிடைத்தையொட்டி, அவர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.