திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவமும், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் என இரண்டு பிரமோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தலைமையில், அதற்கான போஸ்டர் வெளியீடு விழா நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களைக் காணிக்கையாக வழங்குவார். மேலும், வருடாந்திரப் பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
திருப்பதி வரும் பக்தர்களுக்கு வாகன சேவைகள் மூலம் சிறந்த தரிசனம் வழங்குதல், அறைகள் முன்பதிவு, பிரசாதம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், பிரமோற்சவ விழாக்களின் போது சாமானியப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று விகானச மகாமுனி ஜெயந்தியை முன்னிட்டு பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.