அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம் என்ற முழக்கத்தை, இந்த ஆண்டு முன்னிறுத்தியுள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற அடிப்படையில், ஒரு இந்து மறுமலர்ச்சி விழாவாக வீரத்துறவி ராமகோபாலனால் கடந்த 1983 -ம் ஆண்டு துவக்கப்பட்டுக் கடந்த 40 ஆண்டுகளாக வீதி தோறும் விநாயகரை வைத்து நடைபெற்று வருகின்ற ஒரு சீர்மிகு விழா விநாயகர் சதுர்த்தி விழா.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவானது மக்கள் மத்தியில் ஜாதி வேறுபாடுகளை, இன வேறுபாடுகளை, மொழி வேறுபாடுகளை, பொருளாதார வேறுபாடுகளை அழித்து அனைவருக்குமான விழாவாக இன்று மாறி உள்ளது, அதற்குக் காரணம் இந்து முன்னணி.
இந்துக்களை அவமானப்படுத்துவது, புறம் பேசுவது, இந்து நம்பிக்கையை; இந்து வழிபாட்டு முறைகளை, இந்து மதத்தை, சனாதன தர்மத்தைக் கேவலப்படுத்துவது போன்றவற்றை முறியடித்து தமிழகம் என்றும் ஆன்மீக பூமி என்பதையும், தேசிய சிந்தனை கொண்ட மக்கள் வசிக்கும் பூமி என்பதையும் விநாயகர் சதுர்த்தி விழா மெய்ப்பித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பை முன்னெடுத்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களை விழிப்புணர்வு அடையச் செய்கின்றப் பணியை விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி பேர் இயக்கம் செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அன்னைத் தமிழைக் காக்க, ஆன்மீகத்தை வளர்ப்போம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி சுமார் இரண்டு லட்சம் விநாயகர்கள் தமிழகம் முழுக்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தமிழை வைத்துப் பிழைப்பவர்கள் தமிழை வைத்து வயிறு வளர்ப்பவர்கள் யார் யார் என்பதைத் தோலுரித்துக் காண்பிக்கின்ற பணியை இந்த விநாயகர் சதுர்த்தி மூலமாக இந்து முன்னணி வெளிக் கொண்டு வர இருக்கிறது.
பக்தி பரவசத்தோடு விநாயகரை வணங்கும் அனைவரும், எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு சிறப்பான வாழ்க்கை அமையப் பெற்று வாழ வேண்டும் என்று முழுமுதற் கடவுள் விநாயகரைப் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.
தமிழக மக்கள் அனைவரும் பட்டிதொட்டி எங்கும் நடக்கின்ற இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.