மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு ஒய் பிரிவிலிருந்து இசட் பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஓய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை டெல்லி போலீசார் கவனித்து வந்தனர். இனிமேல், அதாவது வரும் காலத்தில், சிஆர்பிஎப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஏற்றுக் கொள்வார்கள்.
இசட் பிரிவு பாதுகாப்பு என்பது, சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 14 முதல் 15 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட நாட்டில் 176 பேருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 177-ஆக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத படையினர் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இதில், நியாயம் இஸ்ரேல் பக்கம் இருப்பதால், நமது பாரத நாடு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.