திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, முதலில் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி, மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சட்ட விரோதமாக தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் அத்துமீறி நுழைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் மீது, தமிழக டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. அதில், E.D அலுவலகத்தில் உள்நோக்கத்தோடு முக்கிய கோப்புகளை DVAC களவாடி சென்றுள்ளனர்.
குறிப்பாக, பல்வேறு வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்களை, தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் திருடி சென்றதோடு, பல்வேறு வழக்குகளின் விசாரணையை பாதிக்கும் வகையில், பல ஆவணங்களை அலைபேசி மற்றும் பல மின்னணு சாதங்களின் மூலம் படம் பிடித்து நகல் எடுத்து சென்றுள்ளனர் என்றும் அமலாக்கத்துறை புகாரில் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை கொடுத்துள்ள புகாரின் மீது தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.