நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக, முக்கியக் குற்றவாளியான லலித் ஜாவுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத் என்பவரை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, அத்துமீறலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தின் லக்னௌவைச் சேர்ந்த சாகர் சர்மா, பெங்களூரு விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், இவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமிட்ட ஹரியானாவைச் சேர்ந்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே ஆகியோரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் மோகன் ஜா என்பவர் டெல்லி போலீஸில் சரணடைந்தார். அவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 6-வது நபரை டெல்லி போலீஸார் இன்று கைது செய்திருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்டிருப்பவர் ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான லலிதா ஜா, டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு தப்பியோடியபோது மகேஷ் குமாவத்தான் அடைக்கலம் கொடுத்து, தனக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைத்திருக்கிறார்.
அதோடு, முதலில் கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை உடைத்து அழித்ததிலும் இவருக்கு பங்கு இருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். மேலும், நீலம் தேவியோடு மகேஷ் குமாவத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தவிர, மகேஷ் குமாவத் கடந்த 13-ம் தேதி டெல்லி வந்ததும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மகேஷ் குமாவத்தின் நெருங்கிய உறவினரான கைலாஷ் என்பவரையும் டெல்லி போலீஸார் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.