அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, மின்துறையும் வளரும் என்றும், இத்துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா உள்ளது என்றும் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர். கே. சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது, 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு 60 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இது ஒரு வளர்ச்சி அடையும் துறை. தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். தேவைக்கு ஏற்ப விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே அரசின் பணி ஆகும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மின்துறை பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்து பேசிய அமைச்சர், சமீபத்திய ஆண்டுகளில் அவற்றின் பங்கு விலைகள் 2.5 முதல் 3 மடங்கு உயர்ந்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் வளர்ச்சி உலகிலேயே மிக வேகமாக இந்தியாவில் உள்ளது. புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் ஏற்கனவே மொத்த மின் திறனில் 44 சதவீதமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து மொத்த திறனில் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். இந்தியாவின் மின்சார பரிமாற்ற அமைப்பு உலகின் வேறு எந்த பரிமாற்ற அமைப்பையும் விட முன்னணியில் உள்ளது என்று கூறினார்.