சீனாவின் ஷாங்சி மாகாணத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு சுவரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
ஷாங்சி மாகாணத்தில், 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து ஹோஹோட் – பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்தது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுரங்கப்பாதையின் தடுப்பு சுவரின் மீது அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் விபத்தில் காயமடைந்த 37 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.