அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தாம் வைத்த விமர்சனங்கள் 100 சதவீதம் உண்மை என்றும் அதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டேன் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
“எடப்பாடி பழனிசாமி மீது வைத்த விமர்சனங்களிலிருந்து பின்வாங்கமாட்டேன். வெள்ளை சட்டை அணிந்து கும்பிடு போட்டால் தான் அரசியல்வாதியா? “அதிமுகவில், 70 வயதிலும் தலையில் ‘டை’ அடித்து கொண்டு இளைஞர்கள் என்று கூறுகின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும். வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும்.
பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும்.
தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.,வில் இணைவார்கள். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ., பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ., தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன என அண்ணாமலை தெரிவித்தார்.